பண மோசடி புகார் விவகாரம்.. மௌனம் கலைத்த முகேன் ராவ்! இனி சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் முகேன் ராவ், தயாரிப்பாளர் ஒருவருடனான பணப் பிரச்சினை தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை அமைதியாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இனிமேல் இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
என்ன பிரச்சினை?
நடிகர் முகேன் ராவ் உள்ளிட்ட சிலர் மீது தயாரிப்பாளர் மலேசியா பாண்டியன் பணம் தொடர்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக முகேன் ராவ், இயக்குநர்கள் எம். கவின், டி.ஆர். பாலா மற்றும் மேலாளர் ஹரிஷ் ஆகியோருக்கு மொத்தம் ரூ.10.55 லட்சம் முன்பணமாக வழங்கியதாக தயாரிப்பாளர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் முகேன் ராவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி மட்டுமே திருப்பி வழங்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், வட்டியுடன் சேர்த்து ரூ.14.29 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முகேன் ராவின் விளக்கம்!
இந்த விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ள முகேன் ராவ், ஒரு திரைப்படத்திற்காக முன்பணம் பெற்றிருந்ததாகவும், அந்தப் படம் தொடங்கும் என்ற நம்பிக்கையில் சுமார் 8 முதல் 10 மாதங்கள் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் மற்ற இரண்டு திரைப்படங்களில் நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்புகளையும் இழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் தயாரிப்பாளர் அந்தத் திரைப்படத்திலிருந்து விலக முடிவு செய்ததாகவும், இருப்பினும் தானாக முன்வந்து பெற்றுக்கொண்ட முன்பணத்தை முழுமையாகத் திருப்பி வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனி சட்டப்படி நடவடிக்கை!
இந்த விவகாரத்தில் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முகேன் ராவ், இதுவரை தொழில்முறை அணுகுமுறையுடன் அமைதியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இனிமேல் உரிய சட்ட நடைமுறைகளின் மூலம் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், பொதுவெளியில் இதுகுறித்து விவாதிக்கவோ அல்லது கூடுதல் தகவல்களை வெளியிடவோ விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முகேன் ராவின் இந்த விளக்கம் தற்போது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'நிறம்' திரைப்படம் நவம்பர் 27ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் புகார் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.