நயன்தாரா பிறந்தநாள்.. இந்த வருடம் கிஃப்ட் எதுவும் இல்லையா விக்னேஷ் சிவன்?.. ரசிகர்கள் கேள்வி!
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, கணவர் விக்னேஷ் சிவன் பகிர்ந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் விலை உயர்ந்த கார்களைப் பிறந்தநாள் பரிசாக வழங்கிய விக்னேஷ் சிவன், இந்த ஆண்டு என்ன பரிசு வழங்கியுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருந்தது.
கடந்த ஆண்டு நயன்தாராவின் 41-வது பிறந்தநாளுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர் காரை விக்னேஷ் சிவன் பரிசாக வழங்கியிருந்தார். அதற்கு முன்னரும் மெர்சிடிஸ் பென்ஸ் மேபாக் ரக கார்களைப் பிறந்தநாள் பரிசாக வழங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதனால் இந்த ஆண்டும் ஏதாவது விலையுயர்ந்த பரிசு கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், இந்த ஆண்டு விலை உயர்ந்த கார் எதையும் பரிசாக வழங்காமல், தங்களின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையின் அழகான நினைவுகளைப் பகிரும் வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காதல் தொடங்கிய காலம் முதல் திருமணம், குழந்தைகளுடன் வாழும் குடும்ப வாழ்க்கை வரையிலான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நீயும் நானும்' பாடலைப் பின்னணியில் இணைத்து, “மீண்டும் பிறந்தாலும் நீயே வேண்டும்.. என் உயிர், உலகமே.. லவ் யூ மை தங்கமே” என உருக்கமான வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
விலையுயர்ந்த பரிசுகளை விட தங்களின் காதல் நினைவுகளைப் பரிசாக வழங்கிய விக்னேஷ் சிவனின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே, “இந்த வருடம் கிஃப்ட் எதுவும் இல்லையா விக்கி?” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.