என்ன இப்படி ஷாக் கொடுத்துட்டீங்க?.. சிக்மா முதல் காட்சியில் சங்கீதா, திவ்யா சொன்னது இதுவா?
சென்னை: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிக்மா திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியானது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருந்தார். படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இதற்கிடையே சென்னை கமலா திரையரங்கத்தில் படத்தின் முதல் காட்சியை சங்கீதாவும், சாஷாவும் பார்த்தபோது நடந்த விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
விஜய் - சங்கீதா தம்பதியின் மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை படித்துவிட்டு சினிமா இயக்குநராக மாறியிருக்கிறார். முதல் படமாக சிக்மா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதில் சந்தீப் கிஷன் ஹீரோவாகவும், ஃபரியா அப்துல்லா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் ராஜூ சுந்தரம், சம்பத் உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்களும் நடிக்க; தமன் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் படம் ரிலீஸானது.

எப்படி இருந்தது படம்?: விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் சூழலில்; அவரது மகன் என்ட்ரி கொடுத்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பை படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருந்தார்கள். அதே ஆவலோடு படம் பார்க்கவும் சென்றார்கள். ஜேசனின் மேக்கிங் எல்லாம் சூப்பராக இருந்தாலும்; கதை, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனத்தை செலுத்தியிருக்கலாம் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது. படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும்; மோசமான தோல்வியை சந்திக்கவில்லை என்பதே பெரிய நிம்மதிதான்.
படம் பார்த்த சங்கீதா: இதற்கிடையே படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் எல்லாம் சங்கீதாவை எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் தலை காண்பிக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க படம் ரிலீஸான நாள் அன்று; சங்கீதாவும், திவ்யா சாஷாவும் சென்னையில் இருக்கும் கமலா திரையரங்கத்தில் முதல் காட்சி பார்ப்பதற்காக வந்தார்கள். அவர்களை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களுக்கு தியேட்டர் தரப்பிலும் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ரசிகர்கள் சொன்னது: சங்கீதாவை பார்த்ததுமே அண்ணி, அண்ணி என்று ரசிகர்கள் வாஞ்சையோடு அழைத்தார்கள். அதற்கு அவரும் கைகளை அசைத்து ரெஸ்பான்ஸ் செய்திருந்தார். அதேபோல் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகன் போஸ்டரை பார்த்தபடியும் சென்ற புகைப்படம் ட்ரெண்டானது. இந்நிலையில் கமலா தியேட்டரின் நிர்வாக இயக்குநர் விஷ்ணு கமல் பேசியிருக்கும் விஷயம் ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஷ்ணு கமல் சொன்னது: அவர் தனியார் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், "9 மணி ஷோவுக்கு சங்கீதாவும், திவ்யாவும் 8.18 மணிக்கே வந்து பாக்ஸில் அமர்ந்துவிட்டார்கள். படம் போடுவதற்கு முன்பு ஜேசன் தொடர்பாக நாங்கள் போட்ட மாஷ் அப்பை பார்த்து சங்கீதாவும், சாஷாவும் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தார்கள். மேலும் அவர்கள் என்னிடம், 'என்ன இப்படி ஷாக் கொடுத்துட்டீங்க?' என்றும் கேட்டார்கள். அது எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது" என்றார்.