முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நாசர், கார்த்தி.. கூடவே சென்ற கருணாஸ்.. என்ன மேட்டருன்னு பாருங்க!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினரும், தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாக தலைமைசெயலகத்தில் நேரில் சென்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் விஜய்: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், சிபிஎம்,சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மே 10ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மே 12ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் விஜய்.
நேரில் சந்தித்து வாழ்த்து: மேலும் இன்று தலைமைச் செயலகத்தில் தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய், வேளாண்மை மற்றும் நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர்,பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் நேரில் சென்று முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குநர் விக்ரமன்: இதையடுத்து இயக்குநர் விக்ரமன் தனது மகனுடன் சென்று விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் என்ற பந்தா விஜயிடம் கொஞ்சம் கூட இல்லை. 32 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் எப்படி பழகினாரோ, அதே அன்புடனும் நட்புடனும் இப்போதும் பேசினார். எப்போதும் நான் உங்கள் விஜய் தான். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தயங்காமல் சொல்லுங்கள் என்று கூறியது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. திரைப்படத் துறைக்கான சில கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தேன். சந்தித்த முதல் நாளிலேயே அவரிடம் முன்வைத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் எந்த கோரிக்கையும் நான் வைத்ததில்லை என்று விக்ரமன் பேசி உள்ளார்.