ஜனநாயகன் வரும்னு பார்த்தா தெறி ரீ ரிலீஸ் ஆகுது.. சிவகார்த்திகேயனின் ‘தாய் கிழவி’க்கு சிக்கல்?
பிப்ரவரி மாதம் 20ம் தேதி மற்றும் 27ம் தேதி அல்ல ஏப்ரல் 30ம் தேதி வரை ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாது என்பது உறுதியாகி விட்டது. ஜன நாயகன் படத்தி வழக்கை வாபஸ் செய்த நிலையில், சென்சார் போர்டை படக்குழு அணுகியதா? ரிவைசிங் கமிட்டி அமைக்கப்பட்டதா? 18 நாட்களில் தணிக்கை சான்றிதழ் என கூறப்பட்டது என்ன ஆச்சு? என ஏகப்பட்ட சந்தேகங்கள் தொடர்ந்து எழுந்துக் கொண்டே இருக்கின்றன.
படக்குழு மற்றும் தணிக்கை வாரியம் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் விவகாரத்தில் தொடர்ந்து மெளனம் சாதித்து வருகின்றன. இந்நிலையில், தமிழ் சினிமாவில் ட்ரை மந்தாக மாறியுள்ள பிப்ரவரியை மீட்டெடுக்க ரீ ரிலீஸ் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு சூர்யாவின் மெளனம் பேசியதே, டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த வாரம் கில்லி மற்றும் துணிவு ரீ ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தற்போது கலைப்புலி எஸ். தாணு அதிரடியாக தெறி படத்தின் ரீ ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்.
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், நைனிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் பொங்கல் வாரத்திலேயே வெளியாகும் என தாணு அறிவித்தார். ஆனால், வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில் மற்றும் திரெளபதி 2 உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் காரணமாக வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று தெறி ரீ ரிலீஸை தள்ளி வைத்தார்.
வரும் பிப்ரவரி 27ம் தேதி விஜய்யின் தெறி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளை ஆளப்போகிறது என்கிற அறிவிப்பை அட்டகாசமாக தற்போது கலைப்புலி எஸ். தாணு அறிவித்துள்ளார். இந்த வாரம் விஜய்யின் கில்லி படத்தையும் சில தியேட்டர்கள் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரீ ரிலீஸ் செய்யப் போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மேலும், அஜித் குமாரின் துணிவு படத்தையும் இந்த வாரம் ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய் கிழவி திரைப்படம் ஏற்கனவே பிப்ரவரி 27ம் தேதி மாதக் கடைசியில் வெளியாகப் போகிறது என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது அந்த படத்துக்குப் போட்டியாக தெறி ரீ ரிலீஸ் அமைந்துள்ளது. ஜன நாயகன் படத்துக்குப் போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில், சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்யும் தாய் கிழவி படத்துக்கு விஜய்யின் தெறி படத்தால் சிக்கல் வருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் விஜய்யின் தெறி படத்தில் அம்மாவாக ராதிகா சரத்குமார் தான் நடித்திருப்பார். தாய் கிழவி படத்தில் அவர் தான் லீடு ரோல்.