காந்தி கண்ணாடிக்கு KPY பாலா வாங்கிய சம்பளம்!.. இப்படி இருந்தா முடிச்சி விட்ருவாங்களே..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற கலக்கப்போவது நிகழ்ச்சி மூலம் எல்லோரிடமும் பிரபலமானவர்தான் பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் பழைய எபிசோட்களில் இவர் நடித்தார். அந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் விஜய் டிவியின் மற்ற காமெடி நிகழ்ச்சிகளிலும் பாலா உள்ளே புகுந்து எதையாவது செய்து ரசிகர்களை சிரிக்க வைப்பார். எனவே விஜய் டிவியின் செல்லப்பிள்ளை ஆகவே மாறினார் பாலா.
தான் சம்பாதித்த பணத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தை கொண்ட பாலா அதைத் தொடர்ந்து செய்து வருகிறார். சம்பாதிப்பதில் அடிப்படை தேவைகளுக்கு தேவையான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற பணத்தை ஏதோ ஒரு வகையில் யாருக்கேனும் உதவி செய்து வருகிறார் பாலா.
ஆம்புலன்ஸ் வசதி இல்லாத மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, கஷ்டப்படும் சிலருக்கு ஆட்டோ, தையல் மெஷின், சலவை எந்திரம், டூவீலர் வாங்கி கொடுப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி வாங்கி கொடுப்பது என தொடர்ந்து எதையேனும் செய்து வருகிறார் பாலா.
பாலாவின் செயலை பலரும் பாராட்டினாலும் அவர் விளம்பரத்திற்காகவே செய்கிறார் என சொல்லும் குரூப்பும் இங்கே இருக்கிறது. நான் செய்யும் உதவியை பார்த்து மற்றவர்களும் செய்வார்கள் என்பதால்தான் வீடியோக்களை பதிவிடுகிறேன் என பதில் சொன்னார் பாலா. சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த பாலா தற்போது காந்தி கண்ணாடி என்கிற திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறி இருக்கிறார். இந்த படத்தில் காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஒரு முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 5ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. எனவே படக்குழு புரமோஷன் வேலைகளிலும் இறங்கி இருக்கிறது.
இந்த படத்தில் நடிக்க பாலாவுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கப்படவில்லை. ஒரு சிறு தொகையை அட்வான்ஸாக கொடுத்திருக்கிறார்கள் அவ்வளவுதான். வேறு எந்த தொகையும் வாங்காமல் முழு படத்திலும் நடித்து கொடுத்திருக்கிறார் பாலா. இது பற்றி கேட்டால் ‘ என் வீட்டில் நான் கேட்டால் அதிகபட்சம் அம்பதாயிரம் கொடுப்பார்கள். ஆனால் என்னை வைத்து ஒரு தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அவரிடம் போய் என்னுடைய சம்பளத்தை கொடுங்கள் என கேட்க எனக்கு மனம் இல்லை. இந்த படம் எப்படியும் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதன்பின் கண்டிப்பாக எனக்கான சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுப்பார் என நம்புகிறேன்’ என சொல்கிறாராம் பாலா.
தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் மீது ஒரு நடிகர் அக்கறைப்படுவது நல்ல விஷயம்தான் என்றாலும் சம்பளம் வாங்காமல் நடிப்பார் என தெரிந்தால் அவரை நோக்கி பலரும் படையெடுத்து தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். பாலா இதை எப்படி சமாளிக்க போகிறார் என்பது தெரியவில்லை.