லீக் ஆன வீடியோ.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. பதறிக்கொண்டு நடிகர் தனுஷ் சொன்ன பதில்..
2013-ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான ‘ராஞ்சனா’, தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், தனுஷ், சோனம் கபூர், அபேய் தியோல் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியாகி, குறிப்பாக “கங்கையிலே ஒரு வண்ணப் பறவை மூழ்கியதே நீரோடு...” என்ற பாடல் மூலம் ரசிகர்களிடையே இன்றும் பேசப்படுகிறது.
ஆனால், படத்தின் சோகமான கிளைமாக்ஸ் காரணமாக இது வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை.இந்நிலையில், ஈராஸ் மீடியா நிறுவனம் இந்தப் படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படத்தின் கிளைமாக்ஸை மாற்றியுள்ளது.
இந்த மாற்றப்பட்ட பதிப்பு ஆகஸ்ட் 1, 2025 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆனால், இந்த புதிய கிளைமாக்ஸ் காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகர் தனுஷ், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். “இது 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் உறுதியளித்த படமல்ல. ஏஐ மூலம் படத்தின் கிளைமாக்ஸை மாற்றியது ‘அம்பிகாபதி’ படத்தின் ஆன்மாவையே சிதைத்துவிட்டது.
இது கலைஞர்களுக்கும், ஒட்டுமொத்த சினிமா துறைக்கும் விடுக்கப்பட்ட சவால்,” என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், “நடிகர்களின் பணி என்பது கதையில் நடிப்பது மட்டுமல்ல, அந்தக் கதையை அப்படியே பாதுகாப்பதும் ஆகும். ஒரு கதையைச் சொல்லிவிட்டு, ஏஐ உதவியுடன் அதை வேறொரு கதையாக மாற்றுவது சினிமாவின் அழிவு காலத்தை குறிக்கிறது,” என்று வேதனை தெரிவித்தார்.
தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் மீடியா, “படத்தின் முழு உரிமையும் எங்களிடம் உள்ளது. ஏஐ மூலம் புதுப்பிக்கப்பட்டது படைப்பின் அடிப்படையை மாற்றுவது அல்ல, மாறாக கலையின் புதிய வடிவம்.
உலக சினிமாவில் இதுபோன்ற மாற்றங்கள் வழக்கமானவை,” என்று விளக்கமளித்துள்ளது. இருப்பினும், இயக்குனர் ஆனந்த் எல்.ராயும் இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனுஷ் மேலும் கூறுகையில், “சினிமாவை நேசிக்கும் எவரும் இப்படி ஒரு படத்தின் கிளைமாக்ஸை மாற்ற மாட்டார்கள். வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சிலரால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
இயக்குனரும், தயாரிப்பாளரும் சொன்ன கதையை மட்டுமே படமாக எடுக்க வேண்டும். இல்லையெனில், இது கலைஞர்களுக்கு செய்யப்படும் துரோகம். இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்தப் பிரச்சினை இப்போதே சீரமைக்கப்பட வேண்டும்,” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.இந்த சர்ச்சை சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
‘அம்பிகாபதி’ படத்தின் மீள் வெளியீடு எந்த அளவுக்கு வெற்றி பெறும், இந்த ஏஐ மாற்றங்கள் படத்தின் மீதான ரசிகர்களின் அன்பை எப்படி பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.