இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமிக்கு ஆறுமாதம் சிறை என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'ஆனந்தம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் 'ரன்', சண்டைக்கோழி உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் லிங்குசாமி. சமீபத்தில் இவரது இயக்கத்தில் ’தி வாரியர்’ என்ற திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு தமிழ் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'எண்ணி ஏழு நாள்' என்ற படத்திற்காக இயக்குனர் லிங்குசாமி பெற்ற கடனை திருப்பி தராததால் பிவிபி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இயக்குநர் லிங்குசாமி மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.