நெஞ்சுக்கு நீதி திரைவிமர்சனம்

நெஞ்சுக்கு நீதி திரைவிமர்சனம்

போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. ஹிந்தியில் வெளிவந்த ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக் இப்படம் என்றாலும், படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி படத்தின் மேல் ரசிகர்கள் வைத்திருந்த முழு எதிர்பார்ப்பிற்கும் நீதியை வழங்கியதா, நெஞ்சுக்கு நீதி வாங்க பார்க்கலாம்.

கதைக்களம்

நேர்மையாக இருக்கும் ASP விஜயராகவன் { உதயநிதி ஸ்டாலின் } பணிமாற்றம் செய்யப்பட்டு பொள்ளாச்சிக்கு வருகிறார். அவர் பணியேற்ற சில நாட்களில், அங்கு மூன்று சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு ஊரின் நடுவே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கவிட படுகிறார்கள்.

நெஞ்சுக்கு நீதி திரைவிமர்சனம்

 

இந்த வழக்கை விசாரணை செய்யும் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் தெரியவருகிறது. இரண்டு சிறுமிகளையும் கற்பழித்து கொலை செய்துள்ளார்கள் என்று கண்டுபிடிக்கிறார் உதயநிதி. ஆனால், அவரை சுற்றி இருக்கும் சில காக்கி சட்டையும், சில கரை வேட்டியும் இந்த வழக்கை நேர்வழியில் உதயநிதியை நடத்தவிடாமல், முடிவுக்கு கொண்டுவர சூழ்ச்சி செய்கிறார்கள்.

 

இவர்கள் செய்யும் சூழ்ச்சியில் இருந்த தப்பித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வாங்கி கொடுத்தாரா உதயநிதி? அந்த மூன்றாவது சிறுமிக்கு என்னவானது? இறுதியில் சட்டம் நீதியின் பக்கம் நின்றதா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

காவல் துறை அதிகாரியாக வரும் உதயநிதி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சட்டத்தை கடைபிடிக்கும் விதம், பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் தன்மை, அனைவரும் சமம் பேசும் வசனங்கள் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். அம்பேத்கர் பற்றி உதயநிதி பேசிய ஒவ்வொரு வசனத்திற்கும் தனி க்ளாப்ஸ். கதாநாயகியாக வரும் தான்யா, குறைந்த காட்சியில் வந்தாலும் கதைக்கு தேவையானதை செய்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுரேஷ் சக்ரவர்த்தி நடிப்பில் மிரட்டுகிறார். தங்களை தாழ்த்த நினைக்கும் அதிகாரவர்கத்தை எதிர்த்து போராடும் ஆரியின் நடிப்பு, சிறப்பு. நடிகர் இளவரசு, மயில்சாமியின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. தனது இரண்டாவது படமாக இருந்தாலும், கொடுத்த கதாபாத்திரத்தில் தனித்து நிற்கிறார் நடிகை ஷிவானி ராஜசேகர். அப்துல் அலி, ராட்சசன் சரவணன், ரமேஷ் திலக், சாயாஜி சிண்டே தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

நெஞ்சுக்கு நீதி திரைவிமர்சனம்

கனா படத்தின் மூலம் நம்மை சிலிர்க்க வைத்த இயக்குனர் அருண் ராஜா காமராஜ், நெஞ்சுக்கு நீதியின் மூலம் சிந்திக்க வைத்துள்ளார். இனிமேலும், நம் நாட்டில் ஆணவத்தினால் ஒரு கொலை கூட நடக்க கூடாது என்றும், இந்த பூமியில் பிறக்கும் அனைத்து உயிர்களும் சமம் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார். ஹிந்தியில் வெளிவந்து வெற்றியடைந்த படமாக இருந்தாலும், நமது தமிழகத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப திரைக்கதையை அழகாக மாற்றியமைத்துள்ளார் அருண்ராஜா. அதற்காக தனி அப்லாஸ்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு தனித்து நிற்கிறது. திபு நினன் தாமஸ் இசை படத்திற்கு பலம். ரூபனின் எடிட்டிங் சூப்பர். யுகபாரதியின் வரிகள் வலிமை. தமிழரசனின் வசங்கள் நெஞ்சை தொடுகிறது. குறிப்பாக 'இங்கு நம்மை எரிக்க தான் விடுவார்கள், எரிய விடமாற்றங்கள்' என்று அவர் எழுதியுள்ள வசனம் கண்கலங்க வைக்கிறது.

க்ளாப்ஸ்

உதயநிதி, சுரேஷ் சக்ரவத்தி நடிப்பு

அருண் ராஜா காமராஜின் இயக்கம்

திரைக்கதை தமிழரசனின் வசனங்கள்

பல்ப்ஸ்

குறை சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை

மொத்தத்தில் அனைவரும் சமம் என்று கூறி, நீதியை வழங்கியுள்ளது நெஞ்சுக்கு நீதி.

3.75/5

LATEST News

Trending News

HOT GALLERIES