தங்க மீன்கள் சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள்
தங்க மீன்கள் படத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்த நடிகை சாதனாவின் நடனத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
‘தங்க மீன்கள்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற சாதனா, பின்னர் ராம் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'பேரன்பு' படத்தில் மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார். முறையாக பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தற்போது சரிகம தமிழ் யூடியூப் சேனலுக்காக ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணும் கண்ணும்' பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளார்.
'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் வரும் 'கண்ணும் கண்ணும் கலந்து' பாடலும், அதற்கு இடையே வரும் 'சபாஷ் சரியானப் போட்டி' என்ற வசனமும் யாராலும் மறக்க முடியாது. இப்பாடலின் மறு உருவாக்க வீடியோவில், பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா பாலி ஆகிய இரு வேடங்களிலும் சாதனா நடனமாடியுள்ளார், இதுவரை யாரும் செய்யாத சாதனாவின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பிரபல வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா ரீமாஸ்டர் செய்துள்ள இப்பாடலை சரிகமா வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவை விஜய் தீபக் கையாண்டுள்ளார், சிஜி விஎஃப்எக்ஸ் காட்சிகளை நாகராஜன் சக்திவேல் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை சாதனாவே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.