சினேகாவை ஏமாற்றிய ஏற்றுமதி நிறுவனம் - போலீசில் புகார்
பிரபல நடிகையாக இருக்கும் சினேகா, தன்னிடம் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்து இருக்கிறார்.
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனியார் நிறுவனம் தங்கள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை பங்காக கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் தருவதாக ஆசைக்காட்டியதன் பேரில் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சமும், நேரில் ரூ.1 லட்சமும் கொடுத்ததாகவும் இதற்காக மாசம் ரூ.1.80 லட்சம் லாபம் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் ஐந்து மாதம் ஆகியும் பங்கு தொகையும் தராமல், அசல் தொகையும் தராமல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் இதுகுறித்து கேட்டபோது பணம் தர முடியாது என அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்க உள்ளனர்.