போஸ்டரால் வெடித்த சர்ச்சை - சந்தானத்தின் ‘சபாபதி’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘சபாபதி’. அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, ‘குக் வித் கோமாளி’ புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இதையொட்டி இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் சர்ச்சையில் சிக்கி உள்ளது. ‘தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்’ என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று புகைப்படத்துடன் அந்த போஸ்டர் உள்ளதால், அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சபாபதி படத்தின் போஸ்டர்
அந்தவகையில், போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அப்படி செய்யாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு சபாபதி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.