தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் அனிருத்துக்கு ஹேப்பி பர்த்டே!
Happy Birthday Anirudh: நடிகர் ரஜினிகாந்திற்கு இசை அமைக்க வேண்டும் என்ற அனிருத்தின் கனவு பேட்ட திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது. கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட திரைப்படத்தின் அனிருத் இசையமைத்த பாடல்கள் இளமை துள்ளலுடன் அமைந்திருந்தது.
தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் அனிருத் இன்று தனது 31வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தது வெகு சில நட்சத்திரங்களே. நடிகர் சிவாஜி கணேசன் பராசக்தி திரைப்படத்தில் அறிமுகமான போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதுபோல நடிகர் கார்த்தி சிவகுமாருக்கு முதல் படமான பருத்திவீரன் அதிரி புதிரி வெற்றியாக அமைந்தது. இந்த வரிசையில் முதல் படத்திலேயே சாதித்த நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் அனிருத்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவான 3 திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் தனது முதல் திரைப்படத்திலேயே why this kolaveri பாடல் மூலம் உலகம் முழுக்க புகழ் பெற்றார்.
பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய இந்த பாடல் உலகம் முழுக்க ரசிகர்களை இருந்தது. யூடியூப் வலைதளம் அப்பொழுதுதான் பிரபலமடைய தொடங்கியிருந்த நிலையில் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஜப்பான் பிரதமர் அனிருத்தை சந்திக்க விரும்பியது, இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான ரத்தன் டாட்டா தனுஷ், அனிருத்தை அழைத்து விருந்து அளித்தது என இந்த பாடலுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அனிருத் இசையமைத்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மாரி உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி திரைப்படம் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுக்கு அனிருத்தால் சிறப்பாக இசையமைக்க முடியும் என்பதை நிரூபித்தது. குறிப்பாக செல்பிபுள்ள
பாடல் விஜயின் வர்த்தக மதிப்பை மேலும் உயர்த்துவதாக அமைந்தது.
இதையடுத்து நடிகர் அஜித்துக்கு அனிருத் இசையமைத்த வேதாளம் திரைப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றி மூலம் தமிழ் சினிமாவின் முதன்மை இசை அமைப்பாளர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதிலும், சம்பள ரீதியிலும் உயர்ந்தார் அனிருத்.
நடிகர் ரஜினிகாந்திற்கு இசை அமைக்க வேண்டும் என்ற அனிருத்தின் கனவு பேட்ட திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது. கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட திரைப்படத்தின் அனிருத் இசையமைத்த பாடல்கள் இளமை துள்ளலுடன் அமைந்திருந்தது. பேட்ட திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு தர்பார் திரைப்படத்திலும் அனிருத்திற்கு ரஜினிகாந்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவின் முக்கிய படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத்தை தமிழ் சினிமாவின் ராக் ஸ்டாராக செல்லமாக கொண்டாடி வருகிறது.