அவதூறு தொடர்பான வழக்கில் நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன்!

அவதூறு தொடர்பான வழக்கில் நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன்!

அவதூறு தொடர்பான வழக்கில் நடிகை காயத்ரி ரகுராமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்ப சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்து கோயில்களின் வடிவமைப்பை குறித்து பேசி இருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகையும் பாஜக பிரமுகருமான காய்த்ரி ரகுராம் தனது டிவிட்டரில் கடும் விமர்சனத்தை வெளியிட்டு இருந்தார். இந்த விமர்சனத்தை அடுத்து காயத்ரி ரகுராமின் கருத்துக்குப் பலரும் கண்டனங்களை வெளியிட்டு வந்தனர்.

அதோடு விசிக தலைமையில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் காயத்ரி ரகுராம் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதைத் தொடர்ந்து விசிகவின் சட்டப்பிரிவு துணை செயலாளரான வழக்கறிஞர் ஏ.காசி, சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

அந்த வழக்கிற்கான விசாரணை நேற்று நீதிபதி கவுதமன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை காயத்ரி ரகுராமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை வரும் ஜுலை 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News