குடும்பத்தினர் 14 பேருக்கு கொரோனா.... 20 நாளா கடும் மன உளைச்சல் - மாஸ்டர் பட பிரபலம் உருக்கம்
15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா வந்ததாக மாஸ்டர் பட பிரபலம் தெரிவித்துள்ளார்.
வைபவ் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்ன குமார். இதையடுத்து அமலாபாலின் ‘ஆடை’ படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுதவிர, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.
இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், தனது குடும்பத்தினர் 14 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் ரத்ன குமார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தேரினர்.
கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இயக்குனர் ரத்னகுமாரின் இந்த பதிவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.