ஜெயிச்சிருந்தா இப்படி செய்திருப்பீர்களா? - கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார். கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியை தழுவினர்.
தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். மகேந்திரன், சந்தோஷ் பாபு மற்றும் பத்மபிரியா ஆகியோர் அக்கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டபோது எதற்காக கட்சியில் சேர்ந்தீர்கள் என மக்களிடத்தில் பேசினீர்கள். ஆனால் தற்போது கட்சியில் இருந்து விலகும்போது எதுவும் சொல்லாமல் தனிப்பட்ட காரணம் என்று சொல்லி வெளியேறியது ஏன்? வெற்றி பெற்றிருந்தால் இப்படி செய்திருப்பீர்களா? என்று சனம் ஷெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கமல்ஹாசன் அதிகாரத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை, அவரின் தொலைநோக்கு பார்வை ஒன்றே போதும் என பாராட்டியுள்ளார் சனம் ஷெட்டி.