தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்
பழம்பெரும் மலையாள நடிகரும், தேசிய விருதுபெற்ற கதாசிரியருமான மாதம்பு குன்சுகுட்டன் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது பழம்பெரும் மலையாள நடிகரும், கதாசிரியருமான மாதம்பு குன்சுகுட்டன் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இவருக்கு வயது 80.
சுமார் 40 வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் நடிகராகவும், கதாசிரியராகவும் வலம்வந்த இவர், கடந்த 2000-ல் வெளியான கருணம் படத்துக்கு சிறந்த திரைக்கதை எழுதியதற்காக தேசிய விருது பெற்றார். சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் மரணம் அடைந்தனர். திரையுலகினர் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.