'இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க..' இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
30 வயது வரை ஏதும் சாதிக்கவில்லை என்று இளைஞர்கள் கவலைப்பட வேண்டாம் எனறு தேவா அளித்த அறிவுரை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் சுமார் 400 படங்கள் வரை இசையமைத்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் தேவா. இவர் நேற்று திடீரென காலமானார். அவரது மறைவு மொத்த தமிழ்நாட்டையும் கதிகலங்க வைத்துள்ளது.
தேவா எனும் இசை தேவன்:
தேவா எப்போதும் மிகுந்த சுறுசுறுப்பாக காணப்படுவதுடன் மிகவும் எளிமையாக பழகக்கூடியவர். எந்தவித திரை பின்புலமும் இல்லாமல் திரையுலகில் வந்த தேவா, தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்களுக்கு அறிவுரை கூறியிருப்பார்.
சிறு வயதிலே கனவு:
அந்த நிகழ்ச்சியில் தேவா கூறியிருப்பதாவது, நான் இசையமைப்பாளராக வேண்டும் என்று சின்ன வயதில் கதவு எல்லாம் அடைத்துவிட்டு ஹார்மோனியம் அங்கே இருப்பது போல, தபேலா அங்கே இருப்பது போல, டோலக் இருப்பது போல தனியாக நானே 1, 2, 3, 4 என்று எல்லாம் சொல்லியிருக்கிறேன். யாராவது ஜன்னல் வழியாக பார்த்தால் கூட ஏதோ பைத்தியக்காரன் உளறுகிறான் என்றுகூட சொல்லி சிரிப்பார்கள். யாருமே அங்கே இல்லையல்லவா?
தேவா தந்த அறிவுரை:
அது கனவு. நானெல்லாம் 40 வயதுக்கு மேல்தான் சினிமாவிற்கே வந்தேன். இன்டர்வேலுக்கு மேலேதான் சினிமாவிற்கே வந்தேன். ஒரு படம் வெற்றி பெறுகிறது என்று கருதினால் இன்டர்வெலுக்கு முன்னாடி ரொம்ப கதை தொய்வாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், சார் இன்டர்வெலுக்கு அப்புறம் தூக்குனான் சார். என்ன மாதிரி படம்? என்ன கிளைமேக்ஸ்? என்று சொல்கிறோம்.
அதுபோலதான் வாழ்க்கையும். நமக்கு 40 வயது வரை வாழ்க்கை தொய்வாக இருந்தால் கூட பரவாயில்லை. 40 வயதுக்கு மேல் ஒரு நல்ல வாழ்க்கையை கொடு இறைவா. அதுதான் வாழ்க்கை. அதுதான் நல்ல கிளைமேக்ஸ். அதனால்தான் 30 வயது வரை பெரிய ஆள் ஆக முடியவில்லையே. 25 வயதில் வர முடியவில்லையே என்று யாருமே நினைக்காதீங்க.
கனவுக்கு இடம் உண்டு:
நமக்குனு ஒரு இடம், நமது கனவுக்கு என்று ஒரு இடம் இருக்கிறது. இப்படி ஒரு மேடை இருக்கிறது. இப்படி ஒரு இடம் இருக்கிறது. ஒரு 4 சுவற்றில் நாம் இசையமைத்து அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் கேட்டு அடக்கமாக இருந்து அப்படியே குனிந்து இருந்தால், நேரு ஸ்டேடியத்தில் தலைநிமிர்ந்து நிற்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேவா தந்த இந்த அறிவுரை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 1950ம் ஆண்டு பிறந்த தேவா முதன்முதலாக 1986ம் ஆண்டு மாட்டுக்கார மன்னாரு என்ற படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். 36 வயதில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், அந்த படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில்,
1990ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு எனும் அவரது 3வது படம்தான் அவருக்கு திரையுலகில் வாழ்க்கையைத் தொடங்கி வைத்துள்ளது. அவருடைய 40வது வயதில் 3வது படத்திற்கு இசையமைத்த தேவா தன்னுடைய 45வது வயதில் 125 படங்களுக்கு இசையமைத்தார்.
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன், பிரபு, விஜய், அஜித், சூர்யா, அருண் விஜய், சிம்பு, தனுஷ் என அனைத்து உச்சநட்சத்திரங்களுக்கும் இசையமைத்துள்ளார்.