DC: லோகேஷ் கனகராஜ் Highly paid Action hero-வாக வலம் வருவார்.. தனது ஸ்டைலில் பாராட்டிய பார்த்திபன்
சென்னை: இயக்குநராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி, முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது அந்த இயக்குநர் அவதாரத்தை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, கேமராவுக்கு முன்னால் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'DC' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வரும் நிலையில், அவரது நடிப்பு குறித்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'DC' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதில் லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பார்வதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநரின் கையில் ஹீரோ அவதாரம்: அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'DC', காதல், ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் நகரும் கதையாக உருவாகியுள்ளது. வழக்கமான ஹீரோ கதாபாத்திரம் போல் இல்லாமல், தேவதாஸ் கதாபாத்திரத்தின் இருண்ட பக்கங்களையும் உணர்வுகளையும் மையப்படுத்தி லோகேஷ் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருந்தது.
இயக்குநராக இருந்தபோது கேமராவுக்கு பின்னால் நின்று ஹீரோக்களை இயக்கிய லோகேஷ், இந்தப் படத்தில் கேமராவுக்கு முன்னால் நின்று அதே ஆக்ஷன் களத்தை எதிர்கொண்டிருக்கிறார். குறிப்பாக, அவரது உடல்மொழியும் ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பார்த்திபன் பாராட்டு: இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் நடிப்புக்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பாராட்டு தெரிவித்திருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. ஏற்கெனவே இயக்குநராக லோகேஷின் படைப்புகளை கவனித்து வந்த திரையுலகினர், தற்போது அவரை ஒரு நடிகராகவும் பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஒரு இயக்குநர் நடிகராக மாறும்போது, தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் 'DC' படத்தில் லோகேஷின் தேவதாஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
![]()
அனிருத் இசைக்கு தனி வரவேற்பு: படத்தின் மற்றொரு முக்கிய பலமாக அனிருத்தின் இசையும் பின்னணி இசையும் பேசப்படுகிறது. ஆக்ஷன் காட்சிகளுக்கு அனிருத் அமைத்துள்ள இசை படத்தின் வேகத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, லோகேஷின் நடிப்புடன் அனிருத்தின் பின்னணி இசை இணையும் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
வசூலிலும் தடதடக்கும் DC: வசூலை பொறுத்தவரை 'DC' படத்துக்கு முதல் வார இறுதி சாதகமாக அமைந்துள்ளது. இந்திய அளவில் முதல் நாளில் ரூ.4.10 கோடி நிகர வசூல் செய்ததாகவும், மூன்றாவது நாளில் மட்டும் ரூ.9 கோடியை கடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மூன்று நாட்களில் இந்திய நிகர வசூல் ரூ.20.95 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முகேஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பை கவனித்துள்ளார். இயக்குநராக ஏற்கெனவே தனக்கென மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ், 'DC' மூலம் நடிகராகவும் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். முதல் படத்திலேயே கிடைத்து வரும் வரவேற்பு, இனி அவரை தொடர்ந்து ஹீரோவாக பார்க்கும் வாய்ப்பை உருவாக்குமா என்பதுதான் தற்போது கோலிவுட்டில் எழுந்துள்ள எதிர்பார்ப்பு.