பரிமளா & கோ திரை விமர்சனம்

பரிமளா & கோ திரை விமர்சனம்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஸ்கின், சஞ்சனா, சாண்டி, அனந்திகா ஆகியோர் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பரிமளா & கோ. பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. 

 

கதைக்களம்

பரிமளா (ஜெயராம்), சுதந்திரம் (ஊர்வசி) தம்பதிக்கு இரு மகள்கள். இதில் மூத்த மகள் பராசக்தி (சஞ்சனா), இளைய மகள் மதுமிதா (அனந்திகா). வரவு செலவு பார்த்து, அதில் மிச்சம் பிடித்து வாழும் மிடில் கிளாஸ் (Middle Class) ஃபேமிலி தான் இந்த பரிமளா & கோ.

பரிமளா & கோ திரை விமர்சனம் | Parimala And Co Movie Review

இப்படியொரு சூழலில் பரிமளாவின் இளைய மகள் மதுமிதாவுக்கு காதல் தொல்லை கொடுத்து வருகிறார் வர்கீஸ் (சாண்டி). வீட்டிற்கு வந்து தொல்லை செய்வது, தெருவில் வரும்போது அத்துமீறுவது, முத்தம் கொடுப்பது, மதுமிதா அக்கா பராசக்தியிடம் பிரச்சனை செய்வது என தொடர்ந்து பரிமளாவின் வீட்டில் உள்ளவர்களை தொந்தரவு செய்து வருகிறார்.

இந்த நிலையில், வர்கீஸை கொலை செய்துவிடலாம் என பரிமளா முடிவு எடுக்கிறார். இவர் சொன்ன நேரமோ என்னமோ, வர்கீஸை கொலை செய்துவிடுகின்றனர். இதன்பின், இந்த கொலையை யார் செய்தது என்பதை தேட போலீஸ் தொடங்குகிறது.

 

பரிமளா & கோ திரை விமர்சனம் | Parimala And Co Movie Review

பரிமளா வீட்டில் உள்ள யாரோ ஒருவர்தான் கொலை செய்தாரா? அல்லது வேறு யாராவது வர்கீஸை கொன்றார்களா? எதற்காக கொலை செய்தார்கள்? இதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

பல ஆண்டுகளுக்கு பின் ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். பஞ்சதந்திரம் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இவர்களுடைய டைமிங் வேற லெவலில் உள்ளது. ஊர்வசி ஒன்னு சொல்ல அதற்கு ஜெயராம் கொடுக்கும் ரியாக்ஷன் வசனங்களே இல்லாமல் நம்மை சிரிக்க வைக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை இவர்கள் இருவரும் எப்போதெல்லாம் திரையில் வருகிறார்களோ அப்போதெல்லாம் திரையரங்கில் சிரிப்பலைதான். 

பரிமளா & கோ திரை விமர்சனம் | Parimala And Co Movie Review

இவர்களுடன் சேர்ந்து நடிகைகள் சஞ்சனா மற்றும் அனந்திகா என இருவரும் நன்றாக நடித்துள்ளனர். இவர்களை தாண்டி படத்தில் ஸ்கோர் செய்தது என்றால் அது மிஸ்கின் மற்றும் சாண்டி தான். ஒருபுறம் போலீஸாக மிஸ்கின் மறுபுறம் கஞ்சா விற்பனை செய்யும் ஆளாக சாண்டி என இருவரும் தங்களது கிடைத்த கதாபாத்திரங்களில் சிறப்பாகவே நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, சந்தோஷ் சோபன், சிங்கம் புலி, பகவதி என அனைவரின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.

கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்ததே இப்படத்தின் முதல் ஹைலைட். ஜெயராமுக்கு 'பரிமளா', ஊர்வசிக்கு 'சுதந்திரம்', யோகி பாபுவிற்கு 'உயிர் உலகு', மூத்த மகளுக்கு பராசக்தி என தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு நன்றாகவே பெயர் வைத்துள்ளார். இதை தாண்டி கதாபாத்திர வடிவமைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதனை அந்தந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்களும் கச்சிதமாக செய்துள்ளனர்.

 

பரிமளா & கோ திரை விமர்சனம் | Parimala And Co Movie Review

 

பரிமளா & கோ திரைப்படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், ஒரு கட்டத்தில் எதற்கு இவ்வளவு வேகம் என தோன்றியது. எடிட்டிங்கில் டக்கு டக்கு என்று பல கட்; இது படத்தை பார்க்கும் அனுபவத்தை கெடுக்கிறது. என்னதான் நகைச்சுவை காட்சிகள் ஒர்க்அவுட் ஆகியிருந்தாலும், படத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே இருந்த அந்த பயம் கலந்த பரபரப்பும் நமக்கு கடத்தப்படவில்லை. இதனால், படத்தோடு நம்மால் ஒன்றிப்போக முடியவில்லை; படத்தில் வரும் கதாபாத்திரங்களுடனும் பயணிக்க முடியவில்லை. மேலும், பல விஷயங்களும் நமக்கு குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.

இப்படி படத்தில் குறைகள் என்று இருந்தாலும், இயக்குநர் பாண்டிராஜ் சொல்ல வந்த மெசேஜ் இன்று மிகவும் முக்கியமான ஒன்றாகும். போதை பழக்கத்தால் சீரழிந்து போகும் இளைய சமுதாயத்தை பற்றியும், அதனால் எத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன என்பதையும் படத்தில் காட்டியுள்ளார். படத்தில் சொல்லும் கருத்தால் மாற்றம் ஏற்படுமா என்பது சாத்தியம் இல்லாத ஒன்றுதான்; ஆனால், இதை படத்தில் எடுத்து பேசியதற்கு இயக்குநர் பாண்டிராஜுக்கு பாராட்டுகள்.

 

பரிமளா & கோ திரை விமர்சனம் | Parimala And Co Movie Review

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். குறிப்பாக பரிமளாவின் வீட்டிற்குள் நடக்கும் காட்சிகளை ஒளிப்பதிவு மூலம் நன்றாகவே காட்டப்பட்டுள்ளது. மேலும், பின்னணி இசை படத்தை பல இடங்களில் தாண்டி பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பிளஸ் பாயிண்ட்ஸ்

ஊர்வசி, ஜெயராம், மிஸ்கின், சஞ்சனா, சாண்டி மற்றும் அனந்திகா நடிப்பு

நகைச்சுவை காட்சிகள்

கதாபாத்திர வடிவமைப்பு

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை

கிளைமாக்ஸ் காட்சி மற்றும் சொன்ன மெசேஜ்

படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ்

கதாபாத்திரங்களுக்கு இடையே இருந்த பயமும் பதற்றமும் நமக்குக் கடத்தப்படவில்லை.

பொறுமையாக படத்தை கொண்டு சென்றிருக்கலாம். அப்படி நடந்தது படத்தை பார்க்கும் அனுபவத்தை கெடுத்தது.

மொத்தத்தில் இந்த பரிமளா & கோ-வில் குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்கலாம்.  

பரிமளா & கோ திரை விமர்சனம் | Parimala And Co Movie Review

LATEST News

Trending News

HOT GALLERIES