“கருப்பு” படம் கிளப்பிய ஆர்வம்... யார் இந்த கருப்பசாமி..டிரெண்டாகும் காவல் தெய்வம்!

“கருப்பு” படம் கிளப்பிய ஆர்வம்... யார் இந்த கருப்பசாமி..டிரெண்டாகும் காவல் தெய்வம்!

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் தியேட்டரில் வெளியான கருப்பு திரைப்படம் மக்களின் பேராதரவை பெற்று நல்ல வசூலை அள்ளி வருகிறது. "கருப்பு" திரைப்படம் வெளியாகிய பிறகு, பல திரையரங்குகளில் பரவசமடைந்து கருப்பசாமி வந்து ஆடிவருகின்றனர். கருப்பு படத்திற்கு பிறகு தான் பலரும் கருப்பு சாமி யார் என்று இணையத்தில் தேடி வருகிறார்கள். அவர்களுக்காக இந்த செய்தியில் கருப்பசாமி யார்? மக்கள் ஏன் அவரை காவல் தெய்வமாக வணங்குகிறார்கள் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்

கருப்பசாமி: தமிழர்களின் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் கருப்பசாமி. கிராமங்களை காக்கும் காவல் தெய்வமாகவும், நீதியை நிலைநாட்டும் வீர தெய்வமாகவும் கருப்பசாமி தலைமுறைகள் கடந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். கருப்பசாமி, கருப்பணசாமி, சின்ன கருப்பு, சங்கிலி கருப்பு, நொண்டி கருப்பு என பல்வேறு பெயர்களில் இவரை மக்கள் வழிபடுகிறார். பொதுவாக ஊர் எல்லைகளில், மலை அடிவாரங்களில், காட்டுப்பகுதிகளில் கருப்பசாமி கோயில்கள் அமைந்திருக்கும். கையில் அரிவாள், வாள், சங்கிலி, குதிரை மீது கம்பீரமாக கையில் ஆயுதங்களுடன் வீர தோற்றத்தில் கருப்பசாமி காட்சியளிப்பார். அநியாயம் செய்தால் கருப்பசாமி கேட்க வருவார் என்ற நம்பிக்கை இன்றும் ஆழமாக இருப்பதால், பல இடங்களில் கருப்பசாமி சிலை முன் நின்று சத்தியம் செய்வது வழக்கமாக உள்ளது.

Karuppu Karuppasamy history

சபரிமலையில் கருப்பசாமி: உண்மை, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றை காக்கும் தெய்வமாக மக்கள் கருப்பசாமியை போற்றுகின்றனர். கருப்பசாமி தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளாவிற்கும் கருப்பசாமிக்கு தொடர்பு இருக்கிறது. குறிப்பாக சபரிமலையில் உள்ள சுவாமி ஐயப்பனின் காவல் தெய்வமாக கருப்பணசாமி இருக்கிறார். மகிஷியை அழிக்க வந்த ஐயப்பனுக்கு உறுதுணையாக இருந்தது கருப்பசாமி என சொல்லப்படுகிறது. சபரிமலையில் பதினெட்டு படி அருகே கருப்பணசாமி இருப்பதற்கும் இதுவே காரணம் என பக்தர்கள் நம்புகின்றனர். ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு காவலனாக கருப்பசாமி அமர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மதுரை கள்ளழகர்: கருப்பசாமியின் புகழை தமிழகத்தில் சொல்லும் முக்கியமான கோவிலாக கள்ளழகர் கோவில் உள்ளது. அந்த கோவிலில் பதினெட்டாம்படி கருப்பணசாமி மிகவும் புகழ்பெற்ற காவல் தெய்வமாக விளங்குகிறார். ஒரு காலத்தில் பதினெட்டு மந்திரவாதிகள் அழகர் கோவிலின் ஆபரணங்களை கொள்ளையடிக்க வந்ததாகவும், அவர்களின் தீய நோக்கத்தை அறிந்த பக்தர்கள் மற்றும் தெய்வ அருள் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த நினைவாகவே பதினெட்டாம்படி கருப்பசாமி வழிபாடு உருவானதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.

Karuppu Karuppasamy history

ஆடி மாதம் திறக்கப்படும்: அதன் நினைவாக இன்றும் அழகர் கோவிலில் கதவு பூட்டப்பட்டு அதன் சாவி கருப்பசாமி முன் வைக்கப்படுகிறது. மறுநாள் காலையில் பட்டர்கள் கருப்பசாமியிடம் அனுமதி பெற்று சாவியை எடுத்து கோவிலை திறக்கிறார்கள். சித்திரை திருவிழாவின் போது அழகர் அணியும் நகைகள் அனைத்தும் பட்டியலிட்டு கருப்பசாமி முன் வாசிக்கப்பட்டு பின் தான் பெட்டியில் வைத்து பூட்டப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பௌர்ணமி நாளில் பிரம்மோற்சவ விழாவின் போது மட்டுமே பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னதி திறக்கப்படுகிறது. வருடத்தின் மற்ற நாட்களில் அந்த வாசல் மூடியே இருக்கும் என்பது அங்குள்ள சிறப்பான மரபுகளில் ஒன்றாகும்.

கேடா வெட்டி வழிபாடு: கருப்பசாமி வழிபாடு வெறும் மத நம்பிக்கையாக மட்டும் இல்லாமல், தமிழர்களின் பண்பாடு, கிராம வாழ்க்கை, மரபு, நீதி உணர்வு ஆகியவற்றோடும் இணைந்த ஒன்றாக மாறியுள்ளது. பல கிராமங்களில் இன்னும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு, கேடா வெட்டி, பொங்கல் வைத்து, விருந்து படைத்து கருப்பசாமியை மக்கள் வழிபட்டு வருகின்றனர். கிராமப்பு நம்பிக்கையான காவல் தெய்வமான கருப்பசாமி குறித்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி படமாக எடுத்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES