பெரிய இயக்குநர் கையை சுரண்டி சிக்னல்.. நடிகை காஜல் பசுபதி ஆதங்கம்

பெரிய இயக்குநர் கையை சுரண்டி சிக்னல்.. நடிகை காஜல் பசுபதி ஆதங்கம்

கேரளாவை உலுக்கி வரும் ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து பேசிய நடிகை காஜல் பசுபதி, இந்த கமிஷன் கேரளாவில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். பல பெண்கள் துணிந்து புகார் கொடுத்து இருப்பார்கள் என்று பேட்டியில் கூறியுள்ளார்.

கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பல நடிகர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான், ஆனால், இந்த பிரச்சனை கேரளாவில் மட்டும் இல்லை, பெண்கள் எங்கெங்கு வேலை செய்கிறார்களோ அங்கு எல்லாம் உள்ளது. இது கேரளாவில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பெண்கள் புகார் கொடுக்கலாம் என்று இருந்தால் இன்னும் பலர் முன் வந்து புகார் கொடுத்து இருப்பார்கள். இருந்தாலும் பக்கத்து ஸ்டேட்டுக்கு வந்து விட்டது விரைவில் தமிழ்நாட்டுக்கும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

சினிமா கனவோடு வரும் பெண்கள் வேறு வழியில்லை என்பதற்காக இந்த அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒத்துக்கொள்கிறார்கள் சிலர், என்னிடம் திறமை இருக்கு நான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யமாட்டேன் என்று வாய்ப்பு வரும் வரை காத்திருப்பவர்களும் உண்டு. அதுவும் வெள்ளையாக இருந்துவிட்டால், தேடி தேடி வாய்ப்புகள் வரும், நான் கருப்பு, அதுவும் இல்லாமல் ரூடா கேள்வி கேட்பேன் என்பதால் எனக்கு படவாய்ப்பு வருவதில்லை.

நாம் திரையில் பார்த்து பிரம்மித்துப்போன ஒரு இயக்குநரின் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக சென்று இருந்தேன். அப்போது அவர், கையை பிடித்து குலுக்கி, விரலால் சுரண்டி அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகேவா என்று சிக்னல் கொடுத்தார். அது எனக்கு புரிந்துவிட்டது, இருந்தாலும் எதுவும் பேசவில்லை. இந்த பத்துநாள் ஷூட்டிங்கும் போய்விடும் என்று அமைதியாக இருந்துவிட்டேன். இப்படி பெரிய இயக்குநர்களே சில நேரம் அசிங்கமாக நடந்துக் கொள்வார்கள்.

அதேபோல, பரதேசி படப்பிடிப்பின் போது அந்த தேயிலை தோட்டத்தில் வேதிகாவை அடிப்பது போல ஒரு காட்சி வரும், அந்த காட்சியில் நடித்து காட்டிய பாலா, வேதிகாவை அடிக்காமல் அங்கிருந்த ஒரு துணை நடிகையை அழைத்து நடித்து காண்பித்தார். இதைப்பார்த்து எனக்கு ரொம்ப கோபம் வந்தது. பெரிய இயக்குநர் தானே பாலா, அவரால், ஹீரோயினை அடிக்க முடியாதா, அந்த துணை நடிகைக்கு நடந்தது எனக்கு நடந்து இருந்தால் நான் நிச்சயம் கேட்டு இருப்பேன்.

கோ படத்திலும் சண்டை காட்சியிலும், நான் ஷாட்டில் வராத போதும், வேண்டும் என்றே என்னை படுத்து இருக்கும்படி சொன்னார்கள். ஆனால், டம்மியை வைத்து எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். இதுபோல நான் கேள்வி கேட்பதால் படவாய்ப்பு அப்படியே குறைத்துவிட்டது. இப்படி பெண்கள் எல்லா இடத்தில் தைரியமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக கராத்தே கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்று நடிகை காஜல் பசுபதி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES