என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம்: கமல்ஹாசன் நெகிழ்ச்சி..!

உலக நாயகன் கமல்ஹாசன் திரை உலகிற்கு வந்து 64 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ’கமல்ஹாசன் 64’ என்ற காமன்டிபி போஸ்டர் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

இந்த நிலையில் கமல்ஹாசன் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: 64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.

கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த ’களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படம் கடந்த 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி அதாவது 64 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் ரிலீஸ் ஆனது. இந்த படம் வெளியாகி 64 ஆண்டுகள் ஆனதை அடுத்து ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்

ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்திருந்த இந்த படம் ஏவிஎம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இருந்தது என்பதும், இந்த படத்தை பீம்சிங் இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படத்திலேயே கமல்ஹாசன் சூப்பராக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.