ரஜினி, விஜய், அஜித்தின் அடுத்த படங்கள் ரிலீஸ் எப்போது?
ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’, அஜித் நடித்த ’வலிமை’ மற்றும் விஜய் நடித்த ’பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிய நிலையில் தற்போது இந்த மூன்று மாஸ் நடிகர்களின் அடுத்த படங்கள் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
அஜித் நடித்து வரும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து இந்த படம் வரும் தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளதாகவும் ரஜினியின் மகனாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது.