சாதனைப்பாடகர் எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவு தினம்
மறைந்த பாடகரும், இசையமைப்பாளருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
தமிழ் திரையிசை வரலாற்றில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு என்று தனிப் பெருமை இருக்கிறது. ரசிகர்கள் இவருக்கு பாடும்நிலா என்று பட்டம் கொடுத்து அழைத்தாலும் திரையுலகில் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக்குப் பிறகு அதிகம் நேசிக்கப்பட்ட மூன்றெழுத்து எஸ்.பி.பி. என்ற மூன்றெழுத்தாகதான் இருக்கும்.
1966ல் கோதண்டபாணி இசையில் மரியாதை ராமண்ணா என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்.பி.பி. 19964ம் ஆண்டுகளில் மெல்லிசைக்குழு வைத்து நடத்தி வந்தார். இவரது இசைக்குழுவில்தான் இளையராஜா கிடார் வாசித்து வந்தார். அன்று முதல் பாவலர் சகோதரர்களுடன் நெருங்கிய நட்புடன் இருந்தார் எஸ்.பி.பி. முதல் பாடலாக ஓட்டல் ரம்பா படத்தில் அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு என்ற பாடினார். ஆனால் அந்தப்படம் வெளிவரவில்லை. 1966ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சாந்தி நிலையம் படத்தில் இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடலைப்பாடினார்.
எஸ்.ஜானகியோடு முதல் பாடலாக கன்னிப்பெண் படத்தில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் என்ற முதல் பாடலை பாடத்தொடங்கி அவருடன் அதிக பாடலை பாடி முடித்தார். சங்கராபரனம் படத்திற்காக முதல் தேடிய விருதைப் பெற்ற எஸ்.பி.பி. தொடர்ந்து பல விருதுகளை வாங்கிக்குவித்தார். ஏக்துஜே கேலியே பாடலும் சங்கை ஒலி படத்தின் பாடலுக்கும் தேசிய விருதகளைப்பெற்றார்.
இந்தியாவின் பதினாறு மொழிகளிலும், நாற்பதாயிரம் பாடல்களுக்குமேல் பாடல் பாடிய கின்னஸ் சாதனைப் பாடகராக இருப்பவர் பாலசுப்ரமணியம். இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல்கள் மட்டும் தனிக்கவனம் பெற்றன. இதனால் வெற்றிகரமாக இளையராஜாவோடு பயணத்தைத்தொடர்ந்தார். சிகரம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எஸ்.பி.பி. ஒரு நல்ல மிமிக்ரி கலைஞரும் கூட ரஜினி, கமல் படங்கள் பிற மொழியில் மாற்றம் செய்யும் போது அவர்கள் குரல் போலவே பேசி டப்பிங் செய்து கொடுப்பார்.
திருவண்ணாமலை முதல் சீரடி, திருப்பதி, மந்த்ராலயம் என்று பல கோவில்களில் பக்தி பாடல்களாக இவர் குரலே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எந்த பாடகருக்கும் அமையாத ஒரு வரமாக இவரது பாடல்களே அவர் வாழ்க்கையை பிரதிபலித்தது.
கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டபோதும் கடைசியாக கொரோனா விழிப்புணர்வுக்காக ஒரு பாடலைப் பாடிவிட்டுப் போனார். உதயகீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன் என்ற பாடலின் வரிகள் இப்போது கேட்டாலும் நம்மை கலங்க வைக்கும்.
கண்ணே தீரும் சோதனை
இரு கண்ணில் என்ன வேதனை
தந்தேன் எந்தன் ஜீவனை
என் சாவில் கூட சாதனை
என்ற வரிகள் எஸ்.பி.பி. அவருக்காக பாடிய வரிகளாக மாறிப்போனது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 25ம் தீவிர கொரோனா பாதிப்பால் பாடுவதை நிறுத்திக்கொண்டார் எஸ்.பி.பி. அவர் மறைந்தாலும் பாடும் நிலவாக ரசிகர்களை தன் பாடல் மூலம் காலம் முழுவதும் சந்தோஷப்படுத்திக்கொண்டிருப்பார் எஸ்.பி.பி.
எஸ்.பி.பி.யின் நினைவு தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படங்கள், பாடல்கள் மற்றும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.