'விருமன்' படத்தில் அதிதி ஷங்கருக்கு என்ன கேரக்டர்?
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகும் ‘விருமன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் மதுரையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. கார்த்தி அதிதி ஷங்கர் உள்பட படக்குழுவினர் அனைவரும் இதில் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்று 2டி நிறுவனத்தின் ராஜசேகர் அளித்த பேட்டியில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் குறித்து பல விஷயங்களை தெரிவித்து உள்ளார். அதிதி ஷங்கர் எம்பிபிஎஸ் படித்த டாக்டர், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர், அதனால் அவருக்கு மதுரை தமிழ் வருமோ என்ற சந்தேகம் படக்குழுவினருக்கு இருந்ததாகவும், ஆனால் அவர் முதல் நாள் டெஸ்ட் ஷூட் எடுக்கும்போது அசத்தலாக மதுரைத்தமிழ் பேசினார் என்றும், அதுமட்டுமின்றி முதல் நாள் முதல் முதலாக கேமராவை பார்க்கிறோம் என்ற பயம் சிறிதும் இல்லை என்றும் டெஸ்ட் ஷூட் முடிந்ததுமே எங்களுக்கு தேன் கிடைத்துவிட்டது என்று இயக்குனர் முத்தையா தெரிவித்தார் என்றும் கூறினார். இந்த படத்தில் அதிதி ஷங்கருக்கு தேன்மொழி கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஷங்கர் இதுவரை இயக்குனரிடம் அதிதி ஷங்கர் கேரக்டர் குறித்தோ, தன்னுடைய மகளுக்கு என்னென்ன காட்சிகள் வைக்க போகிறீர்கள் என்றோ ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்றும் எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார் என்றும் அவரது நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி தீபாவளி வரை தொடர்ச்சியாக நடைபெற இருப்பதாகவும் அதன்பின்னர் தீபாவளிக்கு பிறகு 15 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும் இந்த ஆண்டுக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.