சுபாஷ்கரன் - ஷங்கர் நேரடி சந்திப்பு: ஒரு மணி நேரத்தில் முடிந்த 'இந்தியன் 2' பிரச்சனை?
இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று உள்ள நிலையில் ஒரே இரவில் ஷங்கர் மற்றும் சுபாஷ்கரன் இருவரும் சந்தித்ததில் தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்திற்காக இதுவரை ரூபாய் 125 கோடிக்கு மேல் லைகா நிறுவனம் செலவு செய்து விட்ட நிலையில் திடீரென ஷங்கர், ராம் சரண் தேஜா இயக்கும் நடிக்கும் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தங்களது நிறுவனத்தின் தயாரிப்பான ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்க கூடாது என லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி என்பவரை நீதிமன்றம் நியமித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் தற்போது சென்னை வந்துள்ளார். அவர் ஷங்கரை நேரில் சந்திக்க விருப்பப்பட்டதாகவும், இதனையடுத்து ஷங்கர் தனது மனைவியுடன் சுபாஷ்கரன் மற்றும் அவருடைய மனைவியை சந்தித்ததாகவும் இரண்டு குடும்பங்களும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து ஷங்கர் மீதான வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற சுபாஷ்கரன் ஒப்புக்கொண்டதாகவும் அதேபோல் ’இந்தியன் 2’ படத்தையும் முடிக்க ஷங்கர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பல மாதங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த இந்த பிரச்சனையை சுபாஷ்கரன் மற்றும் ஷங்கர் ஆகியவர்களின் ஒரு மணி நேர சந்திப்பில் தீர்க்கப்பட்டுவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே விரைவில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.