மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கைவசம், ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் உள்ளன.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் ‘லட்சுமி’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்ட ராகவா லாரன்ஸ், தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2ம் பாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘துர்கா’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை லாரன்ஸ் இயக்கி, நடிப்பதோடு மட்டுமின்றி தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளார்.
அதோடு 2 மிரட்டலான போஸ்டர்களையும் வெளியிட்டு உள்ளார். இதன்மூலம் இதுவும் பேய் படமாக இருக்கலாம் என தெரிகிறது. விரைவில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.