சினிமா குரல் வளையை நெறிக்கும் புது சட்டம்… பதறும் சினிமா பிரபலங்கள்!
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கனவே இருக்கும் சினிமா ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) சில மாற்றங்களை கொண்டு வர நினைக்கிறது. அதாவது சென்சார் போர்டை தாண்டி வரும் ஒரு சினிமாவை, மத்திய அரசு வைத்திருக்கும் இன்னொரு சென்சார் போர்டு மீண்டும் ஆய்வு செய்யும். அப்படி ஆய்வு செய்யும்போது ஒரு சினிமாவில் அந்த சென்சார் போர்டு மாற்றங்களைக் கொண்டு வரலாம். ஏன் தனக்கு எதிராக இருக்கும் ஒரு சினிமாவை அது தடை செய்யலாம். ஒருவேளை தனக்கு ஏற்றாற்போல சினிமா துறையை மாற்றி அமைக்கும் புது சக்தியாக கூட அந்த சென்சார் போர்டு உருவெடுக்கலாம்.
இப்படியொரு சட்ட வரைவைத்தான் மத்திய அரசு கொண்டு வர நினைக்கிறது. இதற்காக புதிய ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு மசோதா 2021 வை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. இதுகுறித்த கருத்துக் கேட்புக்கான காலக்கெடுவும் நேற்றோடு முடிவடைந்த நிலையில் புதிய சட்டவரைவை குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சட்ட வரைவால் படைப்பு சுதந்திரம் காணாமல் போகும் என்றும், ஜனநாயகத்தன்மை கொண்ட படைப்புகளை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் பல பிரபலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு ஏற்கனவே குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதியக் கல்விக் கொள்கை, புதிய டிஜிட்டல் கொள்கை எனப் பல திட்டங்களை அமல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் சினிமா துறையிலும் மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டுவர நினைக்கிறது.
திரைப்பட தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
பொதுவா ஒரு சினிமாவை எடுக்கும் இயக்குநர் தணிக்கை குழுவிடம் இருந்து தணிக்கை செய்யப்பட்ட சான்றிதழை பெற வேண்டும். அப்படி தணிக்கை செய்யும் குழு, ஒருவேளை தனிப்பட்ட விரோதத்தோடு செயல்பட்டு அந்தப் படத்திற்கு எதிரான ஒரு தரச்சான்றிதழை தந்தால் அதை எதிர்த்து இயக்குநர் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்வார். இப்படி ஒவ்வொரு பட இயக்குநரும் தனக்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாட வேண்டுமா? என்ற கேள்வியும் எழலாம்.
இதற்காகத்தான் திரைப்பட தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் எனும் குழு இயங்கி வந்தது. இந்தக் குழு தணிக்கை குழுவில் ஏற்படும் சிக்கலை இதுநாள் வரை தீர்த்து வைத்தது. சென்சார் போர்டு கொடுக்கும் ஒரு சான்றிதழில் பிழை இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு இயக்குநரும் இந்த தணிக்கை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் சென்று தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொண்டனர்.
ஆனால் இந்தக்குழு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலைக்கப்பட்டு விட்டது. இந்தக் குழு கலைக்கப்பட்ட உடனேயே அந்தக் குழுவின் வேலையை மத்திய அரசு தன் கையில் எடுத்துக் கொள்ள நினைத்து புதிய ஒளிப்பதிவு சட்டவரைவு மசோதாவை உருவாக்கி இருக்கிறது. இப்படி உருவாக்கப்பட்ட சட்டவரைவின் மூலம் மத்திய அரசு நேரடியாக அனைத்துப் படங்களையும் கண்காணிக்கலாம். ஒருவேளை ஆளும் அரசுக்கு எதிராக அந்தக் படத்தில் கருத்துக்கள் இடம்பெற்று இருந்தால் அதை உடனே தடை செய்யலாம்.
இப்படி ஒரு அதிகாரத்தின் கீழ் ஒட்டுமொத்த சினிமா துறையும் செல்லும் பட்சத்தில் படைப்பு சுதந்திரம் என்னவாகும் என்பதே தற்போதைய கேள்வி. மேலும் கலைஞர்களுக்கான ஜனநாயகத்தன்மையும் காணாமல் போய், ஜனரஞ்சகத் தன்மை கொண்ட ஒரு படைப்பை இனி எதிர்பார்க்கவே முடியாது என்ற நிலைமையும் வரலாம். அந்த அடிப்படையில் புதிய சட்டவரைவை எதிர்த்து சினிமா பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் அனுராக் காஷ்யப், ஹன்சல் மேத்தா, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை நந்திதா தாஸ், ஃபர்ஹான் அக்தர், திபாகர் பானர்ஜி, மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோர் புதிய சட்டவரைவு மசோதாவிற்கு கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.