'இந்தியன் 2' விவகாரம், மீண்டும் இழுபறியில்...

'இந்தியன் 2' விவகாரம், மீண்டும் இழுபறியில்...

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'இந்தியன் 2' படம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடக்காமல் நின்று போயுள்ளது. தங்களது படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கரை அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்த போதுதான் 'இந்தியன் 2' படத்தில் அவர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்ட விவகாரம் வெளியில் தெரிந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதியிடம் ஒரு வழக்கைத் தொடர்ந்த லைக்கா நிறுவனம், மேல் முறையீடும் செய்தது. மேல் முறையீட்டு வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லைக்கா தரப்பு தனி நீதிபதியிடம் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் உள்ள நிலையில், ஐதராபாத் உயர்நீதிமன்றத்திலும் இதே கோரிக்கையை வைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் எடுத்துரைத்தார். இதனால் அமர்வு நீதிபதிகள் தனி நீதிபதியிடம் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தபின் மேல் முறையீட்டு வழக்கை மூன்று வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்து உத்தரவிட்டனர்.

தற்போதைய சூழ்நிலையில் 'இந்தியன் 2' விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன் ஒரு வழக்கு, மேல் முறையீட்டு வழக்கு, ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு என சென்றுள்ளது.

இதனால், 'இந்தியன் 2' பட விவகாரத்தில் மேலும் இழுபறி நிலைமையே தொடர உள்ளது. இதனிடையே, தனது பட விவகாரத்தையே முடித்து வைக்காமல் கமல்ஹாசனும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே என கோலிவுட்டில் புகைச்சல் கேட்கிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES