அஜித், நயன்தாரா இப்படியே இருந்தால் சினிமாவில் காணாமல் போய்விடுவார்கள்! – திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி விமர்சனம்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது குறித்து திரையரங்கு உரிமையாளரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியம், தனது திரையரங்கின் யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதன்போது பேசிய அவர், உலகப் புகழ்பெற்ற நடிகர்கள்கூட தங்களது திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நிலையில், அஜித் மற்றும் நயன்தாரா மட்டும் ஏன் அதனைத் தவிர்க்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதை ஏதோ ஒரு பெரிய கௌரவமாக நினைத்துக்கொள்கிறார்கள் என்றும், இது அவர்களது சினிமா மார்க்கெட்டை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகர்கள், தங்களை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, நடிகை நயன்தாரா தனது சொந்த தயாரிப்புப் படங்களுக்கு மட்டும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாகவும் விமர்சித்துள்ளார்.
அதேபோல், நடிகர் அஜித் விளம்பரங்களில் நடிப்பதற்கு நேரம் ஒதுக்கும் நிலையில், தான் நடிக்கும் திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, இதே அணுகுமுறையை இருவரும் தொடர்ந்து கடைப்பிடித்தால், எதிர்காலத்தில் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து காணாமல் போய்விடும் நிலை ஏற்படலாம் எனத் திருப்பூர் சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.
அவரது இந்தக் கருத்துகள் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன