நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு
திரிஷா நடிப்பில் உருவாகி, நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படத்தை பண்டிகை தினத்தன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர்.
திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திருஞானம் இயக்கி இருக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
கடந்த வருடம் மார்ச் மாதமே இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. சுமார் ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த இப்படத்தை தற்போது நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.