சூர்யா பெயரில் வெளியான போலி கடிதம்: என்ன எழுதியுள்ளது தெரியுமா?
நடிகர் சூர்யா அவ்வப்போது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களுடன் கூடிய கடிதத்தை வெளியிடுவார் என்பதும் அவரது கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் சூர்யா பெயரில் வெளியாகியுள்ள ஒரு கடிதம் போலியானது என்று அவரது தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த போலி கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒன்றாகவும். இதற்கான சட்ட போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் அவர்களுடைய நலனுக்கான இயக்கங்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்களோடு நானும் அகரம் அறக்கட்டளை சார்பாக இணைந்து கொள்கிறேன்.
4000 மருத்துவக் கல்வி இடங்கள் இதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கிடைக்க இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை உயர்கல்வியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்களுடைய மொத்த பதிவுச் சுட்டெண் தேசிய மற்றும் மாநில சராசரியை விட அதிகமாகும். எனவே இந்த தீர்ப்பானது ஒரு வருடத்திற்கு 800க்கும் மேற்பட்ட கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களின் மருத்துவ கல்வியை கனவை நனவாக்கும் என்பது என் நம்பிக்கை. சமூக நீதிப் பாதையில் தொடர்ந்து தமிழ்நாடு வீறு நடை போடட்டும், நாமும் உடன் நிற்போம்’ இவ்வாறு அந்த போலி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.