மீண்டும் மாறுகிறதா சிவகார்த்திகேயனின் 'டான்' ரிலீஸ் தேதி?
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் சிவகார்த்திகேயனின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள அடுத்த படமான ‘டான்’ படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் ‘டான்’ திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த தேதியில் சில மாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 14 என்பது திங்கட்கிழமை என்பதால் பிப்ரவரி 17ஆம் தேதி வியாழக்கிழமை இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிப்ரவரி 17ஆம் தேதி என்பது சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு அவரது பிறந்த நாள் விருந்தாக இந்தப்படம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.