சிம்பு மீதான ரெட் கார்டு விவகாரம்... தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு
ரெட் கார்டு விவகாரம் தொடர்பாக சிம்பு தரப்பில் இருந்தும், தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இப்படத்திற்கு நடிகர் சிம்பு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும், இதனால் அந்த திரைப்படத்தின் நஷ்டத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் குறித்து விசாரணை செய்த தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டு விதித்தது. இதனையடுத்து சிம்பு நடித்துவரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்திற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி ஒத்துழைப்பு அளிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தரும் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிம்பு தரப்பில் இருந்தும், தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்தும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. இதையடுத்து சிம்பு நடித்துவரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பெப்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.