இந்தியாவிற்கு உதவுங்கள்... ரசிகர்களுக்கு ஹாலிவுட் நடிகர் வேண்டுகோள்
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் இந்தியாவுக்கு உதவும்படி தனது ரசிகர்களுக்கு நடிகர் ஹேம்ஸ் மெக்அவாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'எக்ஸ் மென்', 'ஸ்பிலிட்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜேம்ஸ் மெக்அவாய். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்கொடை அளிப்பதற்கான இணைப்பைப் பகிர்ந்துள்ளார். "இந்தியாவுக்கு ஆக்சிஜன் கருவிகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவ இந்த இணைப்பில் நன்கொடை அளியுங்கள். இந்தியாவுக்கு உதவி தேவை. உங்களால் உதவ முடியும். உங்களால் முடிந்ததை நன்கொடை கொடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
காணொலி ஒன்றையும் பகிர்ந்திருக்கும் மெக்அவாய், "எல்லோருக்கும் இப்போது இந்தியாவின் நிலை தெரியும்.
இப்போது மிக மோசமாக இருக்கிறது. அங்கு மிகப்பெரிய நெருக்கடி நிலவி வருகிறது. போதுமான ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களுக்கு என் மருத்துவ நண்பர் ஒருவர் அனுப்பி வருகிறார்.
உங்களிடம் பணம் இருந்தால் நல்லது. இல்லையென்றால், இதுகுறித்து மற்றவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் இதற்கு கவனம் கொடுத்தாலே போதும். இந்தியாவின் நிலை நன்றாக ஆகும் என்று நம்புகிறேன். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்" என்று பேசியுள்ளார்.