சக்ரா திரைவிமர்சனம்

சக்ரா திரைவிமர்சனம்

நடிகர் விஷாலின் நடிப்பில் பல தடைகளை தாண்டி தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் சக்ரா. எப்போதுமே மிரட்டலான கதைக்களத்தின் மூலம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நடிகர் விஷாலின் திரைப்படங்களின் வரிசையில், இந்த சக்ரா படமும் இடம்பிடித்துள்ளதா? இல்லையா? பார்ப்போம்.

கதைக்களம்

சுதந்திர தினத்தன்று சென்னையில் வரிசையாக 50 வீடுகளில் கொள்ளை சம்பவம் நிகழ்கிறது. இது தொடர்பாக போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தாலும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட 50 வீடுகளில் விஷாலின் வீடும் ஒன்று. ராணுவத்தில் பணியாற்றி வரும் விஷால், இச்சம்பவம் தெரிந்தது சென்னைக்கு வருகிறார். இந்த கொள்ளையில் தனது தந்தை வாங்கிய சக்ரா மெடலும் திருடு போனதை அறியும் விஷால் கொள்ளையர்களை பிடிக்க முயற்சி செய்கிறார்.

தனது காதலியும், போலீஸ் உயர் அதிகாரியுமான படத்தின் கதாநாயகி ஷ்ரத்தா தான், இந்த கொள்ளை வழக்கை விசாரிக்கிறார் என்பதை அறியும் விஷால், அவருக்கு உறுதுணையாக இருந்து போராடுகிறார்.

இந்த கொள்ளையை விசாரித்து வர வர பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன. இறுதியில் அவர்கள் இந்த கொள்ளைக்கு பின்னால் உள்ள முக்கிய புள்ளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த சக்ரா.

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் விஷால், தனக்கு ஏற்ற ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அதிரடி ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கொள்ளையர்களை கண்டுபிடிக்க அவர் கையாளும் யுக்திகள் அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது.

பல திரைப்படங்களில் உள்ளதுபோல் வழக்கமான நாயகி போல் இல்லாமல், போலீஸ் அதிகாரியாக வந்து அசத்தியுள்ளார் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்து நல்ல கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும் படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது ரெஜினா. அவருடைய கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் தான். இதுமட்மின்றி கே.ஆர்.விஜயா, மனோபாலா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள்.

இயக்குனர் எம்.எஸ்.ஆனந்திற்கு அறிமுக படமாக இருந்தாலும், திரைக்கதையை மிரட்டியுள்ளார். எதிர்பார்க்க முடியாத பல்வேறு டுவிஸ்டுகள் இருந்தாலும், சில இடங்கள் யூகிக்கும்படியே உள்ளது. மேலும் படத்தின் இரண்டாம் பாதியை கொஞ்சம் விறுவிறுப்பாக்கிருக்கலாம்.

மேலும் யுவனின் பி.ஜி.எம் ஒவ்வொரு காட்சிக்கும் வலு சேர்த்திருக்கிறது. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

க்ளாப்ஸ்

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பு

இயக்குனரின் திரைக்கதை சிறப்பு

யுவனின் இசை

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு

பல்ப்ஸ்

படத்தின் இரண்டாம் பகுதி இன்னும் விறுவிறுப்பாக்கிருக்கலாம்

இரும்புத்திரை மாதிரியே உள்ளதால கொஞ்சம் யூகிக்கும்படியே உள்ளது.

மொத்தத்தில் சக்ரா அதிரடியான திரை விருந்து..

LATEST News

Trending News

HOT GALLERIES