படம் எப்படிலேட்டஸ்ட்

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் திரைவிமர்சனம்

1795-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு இடங்களை கைப்பற்றி, அவர்களது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்தி வந்தார்கள். அப்போது ஆங்கிலேயர்களிடம் அடிமைப்படாமல் இருந்த குறுநில ராஜ்ஜியம் ரோனக்பூரை ஆங்கிலேயர்கள் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.
இதற்கு அடிபணியாத ஆங்கிலேயர்கள் அவர்கள் மீது போர் தொடுத்து அந்நாட்டு மன்னர், ராணி, மன்னரின் மகன் ஆகியோரை கொன்று விடுகிறார்கள். இதில் மன்னரின் மகள் பாத்திமா சனா சைக்கை புரட்சியாளரான அமிதாப்பச்சன் ஆங்கிலேயர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார்.
11 வருடங்கள் கழித்து மன்னரின் மகளை வீரமங்கையாக வளர்த்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட வைக்கிறார் அமிதாப்பச்சன். இவர்கள் தனிப்படையாக உருவாகி, தாங்கள் இழந்த நாட்டை கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். இதையறிந்த ஆங்கிலேயர்கள், ஊரில் சின்ன சின்ன திருட்டு, ஏமாற்று வேலைகளை செய்து வரும் அமீர்கானை, அவர்களுடன் இணைந்து காட்டிக்கொடுக்க சொல்லி அனுப்புகிறார்கள்.
இறுதியில் ஆங்கிலேயர்கள் அமிதாப்பச்சனின் படைகளை அழித்தார்களா? பாத்திமா சனா சைக் தனது பகையை தீர்த்து கொண்டாரா? அமீர்கான் காட்டி கொடுக்கும் வேலையை செய்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஆசாத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமிதாப்பச்சன், பாகுபலி படத்தின் சத்யராஜ் கதாபாத்திரத்தை ஞாகப்படுத்துகிறார். வயதானாலும் அவரது சுறுசுறுப்பான நடிப்பு வியக்க வைக்கிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு ஆங்கிலேயருக்கு உளவு சொல்லும் உளவாளியாக நடித்திருக்கிறார் அமீர்கான். வித்தியாசமான தோற்றத்தில் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தை கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார் அமீர்கான். ஆங்கிலேயர் ஆதிக்கத் திமிரை தன் பார்வை மூலமே மிரட்டி இருக்கிறார் லாயிட் ஓவன்.
புரட்சிக்கார பெண்ணாக நடித்திருக்கும் பாத்திமா சனா ஷேக், ஆங்கிலேயர்களை எதிர்த்து தாக்குவதும், வாள் வீசுவதும் என நடிப்பில் அசத்தி இருக்கிறார். இரண்டு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார் கேத்ரினா கைப். அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
வரலாற்று படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் கிருஷ்ண ஆச்சர்யா. சண்டைக்காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கி இருக்கிறார். பல இடங்களில் சுவாரஸ்யமான காட்சிகளை வைத்து தொய்வில்லாமல் கொடுத்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மற்ற படங்களின் ஞாபகம் வந்தாலும் பெரியதாக தெரியவில்லை.
ஹேமந்த்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளை நமக்கு அழகாக காண்பித்திருக்கிறார். அஜய்யின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அமைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ பிரம்மாண்டம். #ThugsOfHindostanReview #AamirKhan #AmitabhBachchan #KatrinaKaif

Related Articles

Close