படம் எப்படிலேட்டஸ்ட்

செய் திரைவிமர்சனம்

எளிமையான குடும்பத்தில் பிறந்த நாயகன் நகுல் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறார். இவருடைய தந்தை ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார். தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் கடைகளை ஏமாற்றி தன்னை ஒரு விளம்பர மாடலாக காட்டிக் கொண்டு ஏமாற்றி வருகிறார்.
நாயகி ஆஞ்சல் முஞ்சல் சில கதைகளை எழுதி வைத்துக் கொண்டு திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். ஒரு நாள் தயாரிப்பாளராக இருக்கும் மனோபாலாவிடம் பல கதைகளை கூறியும் அவருக்கு பிடிக்காததால், உங்களை கவர்ந்த ஒருவரின் கதாபாத்திரத்தை படமாக்க சொல்கிறார். யாரை வைத்து படம் எடுக்கலாம் என்ற யோசனையில் வரும் ஆஞ்சல், நாயகன் நகுல் ஒரு பெண்ணை ஏமாற்றுவதை பார்க்கிறார்.
இதையடுத்து அவரை பின் தொடர்ந்து, அவரைப் பற்றி அறிந்து கொள்கிறார். ஒருநாள், நகுலுக்கு போன் செய்து, அவர் ஏமாற்றியது பற்றி சொல்லி அவரை திட்டுகிறார். தன்னை ஆஞ்சல் பின் தொடர்வதை அறிந்த நகுல், அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
ஆஞ்சலை தன்னுடைய காதல் வலையில் விழவைக்க, வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார் நகுல். இந்நிலையில், நகுலின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் போக, அவருடைய ஆம்புலன்ஸை வேலையை நகுல் பார்க்கிறார். அப்போது, ஒருவரின் சடலத்தை எடுத்து செல்லும் நிலை ஏற்படுகிறது. உறவினராக நாசரும் அந்த உடலுடன் பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் நாசர் மீது நகுலுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
அப்போது, அந்த சடலத்தை பார்க்கும் போது, இறந்தவர் தனது தந்தையை காப்பாற்றியவர் என்பது தெரியவருகிறது. இதையடுத்து அவரின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உணரும் நகுல், அதை உரியவரிடம் ஒப்படைக்க முயற்சி செய்கிறார். இந்த நிலையில், சடலத்தை எடுத்து செல்லும் நகுலுக்கு பல்வேறு அரசியல் தலையீடுகளும், பிரச்சனைகளும் வருகிறது.
இதிலிருந்து நகுல் எப்படி மீண்டார்? அந்த சடலத்தின் பின்னால் இருக்கும் மர்மம், அதில் இருக்கும் அரசியல் சூழ்ச்சி என்ன? ஆஞ்சலுடனான காதல் என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நகுல் தனக்கே உரிய கலகலப்பு, சுறுசுறுப்புடன் படத்தில் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தனித்திறமையை நிரூபித்திருக்கிறார். படம் முழுவதும் எனர்ஜியாகவே நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆஞ்சல் முஞ்சல் தமிழுக்கு புது என்றாலும், அழகாலும், நடிப்பாலும் கவனிக்க வைத்திருக்கிறார். நாசர், பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் பல படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ் பாபு, இப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆகியிருக்கிறார். படம் ஆரம்பத்தில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், போக போக வேகமெடுத்திருக்கிறது. உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். படத்தின் அறிமுக பாடல் சிறப்பாக உள்ளது.
விஜய் உலகநாதனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகள் சிறப்பு. நிக்ஸ் லோபஸின் ஒளிப்பதிவில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘செய்’ செயல்மிக்கவன். #SeiReview #Nakhl #AanchalMunjal

Related Articles

Close