படம் எப்படிலேட்டஸ்ட்

என்.ஜி.கே: திரைவிமர்சனம் – யதார்த்தமான அரசியல் த்ரில்லர்

ஒரு படித்த இளைஞன், அரசியல் சூழலை மாற்ற முயற்சித்து அதற்காக செய்யும் தில்லாலங்கடி வேலைகள் தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை. முதல்முறையாக இணைந்திருக்கும் சூர்யா-செல்வராகவன் கூட்டணி இந்த ஒன்லைன் கதையை யதார்த்தமாக ஏற்று கொள்ளும் வகையில் சொல்லியிருக்கின்றார்களா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்

எம்.டெக் படித்துவிட்டு கார்ப்பரேட் கம்பெனி வேலை பிடிக்காமல் இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் என்.ஜி.கே (சூர்யா), அரசியல்வாதிகளின் சக்தியை ஒருசில சம்பவங்களின் மூலம் உணர்ந்து கொள்கிறார். குறிப்பாக ஒரு வார்டு கவுன்சிலர் கலெக்டரையே மிரட்டுவதை பார்த்து அதிர்ந்து போகும் என்.ஜி.கே, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசியல் பவரை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக அவர் செய்யும் தில்லாலங்கடி வேலைகள், சாணக்கியத்தனம், அதனால் ஏற்படும் விளைவுகள், உயிரிழப்புகள் ஆகியவற்றையும் மீறி தனது இலக்கை எட்டினாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை.

நிழல்கள் ரவி-உமாபத்மனாபன் தம்பதியின் மகனாகவும், சாய்பல்லவின் கணவராகவும் அறிமுகமாகும் சூர்யா, ஆரம்ப காட்சிகளில் குடும்ப செண்டிமெண்ட், இயற்கை விவசாயம், சமூக அக்கறை ஆகியவற்றில் ஈடுபடும்போது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அதன்பின்னர் அரசியலில் சேர்ந்த பின்னர் அவரது நடிப்பு வேற லெவல். கூழைக்கும்பிடு, மிரட்ட வேண்டிய வேண்டிய நேரத்தில் திடீர் மாற்றம், அரசியல்வாதிகளிடம் நக்கல் நய்யாண்டியுடன் பேசுவது, கிளைமாக்ஸில் ‘நீங்கள்ல்லாம் மாறவே மாட்டிங்களா? என பொதுமக்களை பார்த்து காறித்துப்புவது, சாய்பல்லவியுடன் காதல், ரகுல் ப்ரித்தியிடம் மோதல் என சூர்யா தனக்கு தெரிந்த மொத்த வித்தைகளையும் இறக்கியுள்ளார். சூர்யாவுக்கு இந்த படம் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

சாய்பல்லவியின் அறிமுகம் மற்றும் ஆரம்பகட்ட காட்சிகள் ரொம்ப யதார்த்தம். ஆனால் சூர்யாவை சந்தேகப்பட ஆரம்பித்தவுடன் நடிப்பில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் தெரிகிறது. இருப்பினும் அந்த காட்சிகளையும் ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

அரசியல்வாதிகளுக்கு உதவும் கார்ப்பரேட் அதிகாரியாக வரும் ரகுல் ப்ரித்திசிங் தனது கேரக்டரை கச்சிதமாக செய்துள்ளார். சூர்யாவை பார்த்து கொஞ்சம் தடுமாறுவது மட்டும் கொஞ்சம் செயற்கைத்தனமாக உள்ளது. ஆனாலும் கார்ப்பரேட் அதிகாரிகளுக்கும் நாட்டின்மேல் அக்கறை உண்டு, ஆனால் அதை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாமல் இருப்பதாக அவர் பேசும் வசனம் சூப்பர்.

எம்.எல்.ஏ இளவரசு செய்யும் அலப்பறைகள் தமிழ் சினிமாவுக்கு புதிது இல்லை என்றாலும் ஓகே. முதலமைச்சராக தேவராஜ், எதிர்க்கட்சி தலைவராக பொன்வண்ணன் ஆகியோர் அரசியல்வாதிகளாகவே மாறியுள்ளனர். பாலாசிங் நடிப்பு மிக யதார்த்தம். திறமையான நடிகர்களாகிய வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய் ஆகிய இருவரையும் இயக்குனர் சரியாக பயன்படுத்தாமல் வேஸ்ட் செய்துள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்கள் சுமார், குறிப்பாக ‘அன்பே அன்பே’ பாடல் படத்திற்கு தேவையே இல்லை, ஆனால் பின்னணி இசையில் யுவன் மிரட்டியுள்ளார். இந்த படத்தின் முதுகெலும்பே பின்னணி இசை என்றும் கூறலாம்.

டாய்லெட் ஸ்டண்ட் மற்றும் மார்க்கெட் ஸ்டண்ட் இரண்டும் தெறிக்கின்றது. ஸ்டண்ட் இயக்குனர் சாம் அவர்களுக்கு பாராட்டுக்கள். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவிலும், ப்ரவீணின் படத்தொகுப்பிலும் நேர்த்தி தெரிகிறது.

ஒரு அடிமட்ட தொண்டன் அரசியலில் பெரிய இடத்திற்கு வருவதற்காக செய்யும் சாணக்கியத்தங்களை நாம் ‘எல்.கே.ஜி’ படத்திலும் பதவியை காப்பாற்றி கொள்ள ஒரு அரசியல்வாதி எந்த லெவலுக்கு இறங்குவார் என்பதை ‘சர்கார்’ படத்திலும் பார்த்துவிட்டோம். இந்த படத்தில் இந்த இரண்டு படங்களின் பாதிப்பு ஆங்காங்கு தெரிந்தாலும் அதற்கு இயக்குனர் செல்வராகவனை குறை சொல்ல முடியாது. ஏனெனில் இந்த படம் அந்த இரண்டு படங்களுக்கும் முந்தையது. ரிலீஸ் தான் லேட். இருப்பினும் இந்த இரண்டு படங்களில் இருந்து வித்தியாசப்படுத்த இயக்குனர் கஷ்டப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.

தமிழக அரசியலை பொருத்தவரையும் இரண்டு கட்சிகள்தான். மூன்றாவதாக ஒருவர் வளர்ந்து வந்தால் இருவரும் சேர்ந்து அந்த மூன்றாவது நபரை அழித்துவிட முயற்சிப்பார்கள் என்ற தமிழகத்தின் உண்மை நிலையை இயக்குனர் தைரியமாக சொல்லியதற்கு பாராட்டியே தீர வேண்டும். அதேபோல் அரசியலுக்கு நல்லது செய்ய வருபவர்கள் கூட, ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து அந்த கட்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்பது இன்றைய அரசியலில் சாத்தியமில்லை என்றும், புகழின் உச்சியில் இருக்கும் ஒரு கட்சியை தேர்வு செய்து அதன் தலைமையை கைப்பற்றி அதன்பின்னர் மக்களுக்கு நல்லது செய்வதுதான் இன்றைய யதார்த்தம் என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கின்றார் இயக்குனர். தமிழக அரசியலுக்கு நுழைய திட்டமிட்டிருக்கும் ஒரு உச்ச நட்சத்திரம் இந்த ஆலோசனையை பின்பற்றலாம். அதேபோல் ஹீரோயிசத்தை பெரிதுபடுத்தாமல் யதார்த்தமாக கதையை நகர்த்தியதிலும் செல்வராகவனின் புத்திசாலித்தனமான திரைக்கதையில் தெரிகிறது. கல்யாண மண்டபத்தில் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து பேசும் காட்சி இருபெரும் தலைவர்களை ஞாபகப்படுத்துகிறது.

எதையாவது பத்த வைக்கனும்னா மேல இருந்தும் பத்த வைக்கக்கூடாது, கீழே இருந்தும் பத்த வைக்கக்கூடாது, நடுவுல இருந்து  பத்த வைச்சாதான் மேலயும் பத்திக்கும், கீழேயும் பத்திக்கும் போன்ற வசனங்களும், சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், இளவரசு சந்திப்பு காட்சியும், ரகுல் ப்ரித்திசிங்-சாய்பல்லவி இருவரும் ஆஸ்பத்திரியில் பேசும் நக்கலான வசனங்கள் பேசும் காட்சியும் செல்வராகவனின் டச்.

சாய்பல்லவி கேரக்டரில் மட்டும் இயக்குனர் கொஞ்சம் சறுக்கியுள்ளார். சூர்யாவை சந்தேகப்படுவதும், அதற்கு அவர் கூறும் காரணமும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அதேபோல் ரகுல்ப்ரித்திசிங் கேரக்டரை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக்கியிருந்தால் படத்தின் விறுவிறுப்பு அதிகரித்திருக்கும். இரண்டாம் பாதியில் இவரது கேரக்டரை டம்மியாக்கிவிட்டது படத்திற்கு ஒரு பின்னடைவு.

சூர்யாவின் கிளைமாக்ஸ் மேடைப்பேச்சு தான் படத்தின் உயிர்நாடி. குறிப்பாக காந்தி தாத்தா சுதந்திரம் பெற்றுத்தந்த முறையை சூர்யா நக்கலுடன் கூறும்போது தியேட்டரில் கைதட்டல் அதிர்கிறது.

மொத்ததில் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும், அடுத்த தலைமுறைக்கு அரசியல் என்றால் என்ன? என்பதை கற்று கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

Related Articles

Close